தமிழ்நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் மாத பாதியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. வைரஸ் பரவலை தடுத்திட, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து, அமலுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளிப்போனது.
தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து, இன்று முதல் (பிப்ரவரி 1) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. அதேசமயம், ஆன்லைன் வகுப்பும் நடத்த திட்டமிட்டுள்ளதால், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஜனவரி பாதியில் திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்வு தேதி தள்ளிச்சென்றது.
கொரோனா தொற்றால் காலாண்டு, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பொதுச்தேர்வுக்கு முன்னர் மாணவர்கள் சந்திக்கவுள்ள மிகப்பெரிய தேர்வு இதுவாகும்.
அதன்படி, பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரையும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறவுள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil