/indian-express-tamil/media/media_files/2025/09/04/rimc-admission-2025-09-04-19-09-05.jpg)
டேராடூன் ராணுவக் கல்லூரி: 8-ம் வகுப்பு சேர புதுச்சேரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் (RIMC) 2026 ஜூலை 1 அன்று 8-ம் வகுப்பில் சேருவதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என புதுச்சேரி கல்வித் துறை இணை இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
வயது வரம்பு மற்றும் தகுதிகள்:
நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், 2026 ஜூலை 1 அன்று 11½ வயதுக்குக் குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும். அதாவது, அவர்களின் பிறந்த தேதி 2013 ஜூலை 2 முதல் 2015 ஜன.1-க்குள் இருக்க வேண்டும். மேலும், கல்லூரிச் சேர்க்கையின்போது (01.07.2026) விண்ணப்பதாரர்கள் 7-ம் வகுப்பு பயில்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் அவசியம்.
நுழைவுத் தேர்வு விவரங்கள்:
மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்யும் எழுத்துத் தேர்வு 2025 டிசம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. தேர்வு நேரம் மற்றும் பாடங்கள்:
காலை 09:30 - 11:00 மணி: கணிதம்
பிற்பகல் 12:00 - 01:00 மணி: பொது அறிவு
பிற்பகல் 02:30 - 04:30 மணி: ஆங்கிலம்
கணிதம் மற்றும் பொது அறிவுத் தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் இராணுவ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். இந்த மருத்துவப் பரிசோதனை சேர்க்கையின் ஒரு பகுதி மட்டுமே, இறுதி முடிவல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்வு மையம்:
புதுச்சேரி யூனியன் பிரதேச விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத் தேர்வு, அண்ணா நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வித்துறை வளாகத்தில் நடைபெறும்.
விண்ணப்பப் படிவம் பெறுவது எப்படி?
விண்ணப்பப் படிவத்தை வரைவோலை (Demand Draft) மூலம் பெறலாம். "The Commandant RIMC Fund" என்ற பெயருக்கு, டேராடூன் HDFC வங்கிக் கிளையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர்: ரூ.600
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்: ரூ.555 (தகுந்த சாதி சான்றிதழுடன்)
வரைவோலை மற்றும் விண்ணப்பக் கோரிக்கை மனுவை, The Rashtriya Indian Military College, Garhi Cantt, Dehradun, Uttarakhand-248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், 2025 அக்டோபர் 15-க்குள் புதுச்சேரியில் உள்ள கல்வித்துறை அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் அலுவலகம்,
பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம்,
இரண்டாம் தளம், அடுக்ககம்,
அண்ணா நகர், புதுச்சேரி-605005.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.