RRB Recruitment for Indian Railway Notification to be Announced Soon: இந்திய ரயில்வே துறையில் 2.5 லட்சம் காலி இடங்கள் இருக்கின்றன என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கடந்த மாதம் கூறியதை அடுத்து, ’ரயில்வேயில் இருக்கும் வெவ்வேறு துறையினர் அதற்கான பட்டியலை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகும். பெரும்பாலும் பிப்ரவரி இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இதற்கான பணிகள் துவங்கும்’ எனத் தெரிவித்துள்ளார் ஆர்.ஆர்.பி அதிகாரி அங்கராஜ் மோகன்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் தளத்துக்கு அவர் கூறுகையில், “ரயில்வே துறையின் ஃபர்ஸ்ட் ஃபேஸுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பினை, ரயில்வே வாரியம் பிப்ரவரி இறுதி வாரத்திலும், இரண்டாவது ஃபேஸுக்கு மே மாதத்திலும் வெளியிடும். மொத்த ஆள் சேர்ப்பு செயல்முறையும் 2021, ஆகஸ்டுக்குள் நிறைவடையும். இந்த புதிய ஆள் சேர்ப்பு செயல்முறையில் 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் உண்டு ” என்றார்.
இந்திய ரயில்வேயில் மொத்தம் 16 மண்டலங்கள் உள்ளன. ஜனவரியின் தொடக்கத்தில் இது சம்பந்தமாக பேசிய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், “2.25-2.50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மக்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன. 1.50 லட்சம் வேலைகளுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆக, ரயில்வே வழியாக 4 லட்சம் வேலைகள் வழங்கப்படும்” என்றார்.
குரூப் சி மற்றும் டி-யில் 1.2 லட்சத்துக்கும் அதிகமான காலியிடங்கள் இருப்பதாக, கடந்தாண்டு ரயில்வே அமைச்சகம் பதிவு செய்துள்ளது. இதற்கு 2.5 கோடி பேர் விண்ணப்பித்துள்ளார்கள். மேற்கூறிய இரண்டு பிரிவுகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்முறை 2019, ஆகஸ்டுக்குள் நிறைவு செய்யப்பட இருக்கிறது.