தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் 6-ம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்த பாடம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பாடம் நீக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து கடனாளியாகி வேதனை அடைந்த பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்து நிறைவேற்றிய சட்டமசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர் ரகுபதியும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்யும் சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், தமிழகத்தில் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்த பாடம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட 6-ம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான கணித பாடத்தில் ரம்மி விளையாடுவது பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கு காரணமான ரம்மி விளையாட்டு பற்றிய பாடம் குழந்தைகள் படிக்கும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதை உடனடியாக நீக்க வேண்டும் என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, 6-ம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி விளையாட்டு பற்றிய பாடப்பகுதியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரம்மி பாடப்பகுதி இந்த கல்வியாண்டில்தான் இடம்பெற்றுள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த பாடப்பகுதி முழுமையாக நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“