இந்திய மாணவர்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ இடங்களை ரஷ்ய அரசு பல்கலைக்கழகங்கள் ஒதுக்கீடு செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் கோவையில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவிநாசி சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த ரஷ்ய கலாசார மையத்தின் இயக்குநரும் துணைத் தூதருமான அலெக்சாண்டர் டோடோநவ் வோல்கோகிராட், மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் விக்டோரியா நவுமோவா, தேசிய நியூக்ளியர் ஆராய்ச்சிப் பல்கலைக்கழக பேராசிரியர் எலினா சரபுல்ட்சேவா, ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் கல்வி ஆலோசகர் சி.ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியதாவது;
ரஷ்யாவில் உள்ள 600க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் இந்திய மாணவர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் 30 ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர்.
இந்திய மருத்துவ ஆணையம் 2021ல் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மருத்துவப் படிப்புத் திட்ட காலம், பாடத் திட்டம், மருத்துவப் பயிற்சி, பயிற்றுமொழி போன்றவற்றை ரஷிய பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருகின்றது .
சர்வதேச கல்வி நிறுவனங்களின் தர வரிசையில் ரஷிய உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவில் கற்பிக்கப்படும் மருத்துவக் கல்வி சர்வதேச தரத்துடன் உள்ளது.
பிளஸ் 2 முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ரஷ்ய அரசு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயிலத் தகுதியானவர்கள். இந்திய மாணவர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்து உள்ளனர்.
இந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்கான மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறோம். தமிழ் வழியில் பயின்றவர்களும் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கில தகுதித் தேர்வு எழுத வேண்டியதில்லை. மேலும் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கல்விக் கட்டணத்திலேயே மருத்துவம் படிக்க முடியும். அத்துடன் ரஷ்ய அரசு ஆண்டுதோறும் 200 இந்திய மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
குறிப்பாக பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் உதவித் தொகை பெறுவதற்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக ரஷ்யாவில் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான நேரடி மாணவர் சேர்கையானது கோவை அவிநாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீஜண்ட் உணவகத்தில் வரும் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“