நீட் தேர்வு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. சுமார் 16 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து 45 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னமும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் நீட் தேர்வு நடைபெற்ற மையம் ஒன்றில், இரண்டு மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் OMR sheet வெவ்வேறு குறியீடுகளில் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்கை கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் தேர்வு நடத்துபவர்கள் தவறால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது.இரண்டு மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, அவர்களுக்கும் சேர்த்து தான், நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவால், நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தயார் நிலையிலிருந்தும், எங்களால் வெளியிட முடியவில்லை என என்டிஏ அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடிய என்டிஏ, இந்த உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியூஎம்எஸ் மற்றும் பிஎச்எம்எஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை பாதிக்கப்படும் என மனு தாக்கல் செய்து, அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இன்று, இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா மற்றும் பி ஆர் கவாய் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "2 மாணவர்களுக்காக நீட் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல. 16 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, 2 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட் மறுதேர்வை நடத்திய பின்னரே முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். என்டிஏ தாராளமாகத் தேர்வு முடிவுகளை வெளியிடலாம். பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களின் நிலைமையை குறத்து பின்னர் முடிவு செய்வோம்" என தெரிவித்தனர்.
இதற்கிடையில், கேரள உயர் நீதிமன்றம், மாநிலத்தில் ஒரு விண்ணப்பதாரரின் OMR ஷிட்டில் ஏற்பட்டுள்ள முறைகேடு குறித்து விசாரிக்க NTA க்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil