1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்க கல்வித்துறையில் வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனத்தைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு என இரண்டு வகையான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் அதிக அளவில் இருந்தன. குறிப்பாக வட மாவட்டங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. இதனையடுத்து, இவற்றை நேரடி நியமனம் மூலம் நிரப்பிக் கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தநிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் இன்று அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1,000 காலி பணியிடங்களுடன் 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் 8,643 பணியிடங்கள் கண்டறியப்பட்டன. அதில் 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப தொடக்க கல்வி இயக்குநருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,000 காலி பணியிடங்கள் சேர்த்தால் காலியிடங்கள் 1,500 ஆக உயர்கிறது. இந்த பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நியமனம் மூலம் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பிட அனுமதி வழங்கப்படுகிறது.
IFHRMS எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவை விட உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிக காலியிடங்கள் இருக்கும் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.
இடைநிலை ஆசிரியருக்கான 1,500 பணியிடங்களை நிரப்பினால் கிடைக்கும் தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக இருக்கும் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு முதல்முறை பணி நியமனம் செய்யும்போதே, குறைந்தது 5 ஆண்டுகள் அதே மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அந்த ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“