தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத்திட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெற்று வருவதாகவும், ஜூன் மாதம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் 2016 – 2017 ஆம் கல்வி ஆண்டில் உயர்மட்ட பாடத்திட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பாடங்கள் வரையறுக்கப்பட்டன. இந்த பாடத்திட்டம் வடிவமைப்பு குழுவில் பல்வேறு கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் இடம்பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர் பாடப்புத்தகம் ஆசிரியர்கள் அடங்கிய வல்லுநர் குழுவால் எழுதப்பட்டது. இந்த பாடப்புத்தகம் சர்வதேச அளவில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், என்.சி.இ.ஆர்.டி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் எழுதப்பட்டன.
இந்தப் பாடத்திட்டம் இருகட்டமாக 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், பாடத்திட்டத்தின் அளவு அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் சார்ந்த பாடநூல்கள் அதிகபட்சமாக தலா 200 பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக சிரமப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்துக்கு மாநில பள்ளிக்கல்வித் துறையின் பாடப் புத்தகங்களை படித்து வருகின்றனர். ஆனால், பாடப் புத்தக்கத்தின் அளவு அதிகமாக இருப்பதால் அவற்றை குறைத்து தேர்வுகளை நடத்துகின்றனர்.
இந்நிலையில், மாநில பாடத்திட்டத்திலும் 1 முதல் 12-ம் வகுப்புக்கான தமிழ் பாடத்திட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ”ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்களின் கற்றல் சுமையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் பாடத்திட்டம் அதிகபட்சம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டு, பொருத்தமற்ற பாடக் கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 6, 7, 8-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 பாடங்கள் 8 ஆகவும், 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 பாடங்கள் 7 ஆகவும், 11, 12-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 பாடங்கள் 6 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் தமிழ் பாடத்தை எளிதாக கற்க முடியும். தற்போது பாடநூல்கள் அச்சிடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2025-26 கல்வியாண்டு முதல் இந்தப் பாடப்புத்தகங்கள் நடைமுறைக்கு வரும். ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய தமிழ் பாடநூல்கள் வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.