/indian-express-tamil/media/media_files/4RZhhC8Ky8y7no20APej.jpg)
திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் கல்வி நிதியின் முறைகேடு செய்ததாக கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் என மொத்தம் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆய்வக பொருட்கள் வாங்குவது உள்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிதி செலவிடப்பட வேண்டும்.
இந்த நிதி மூலம் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுமதியுடன் பள்ளிகளுக்கு பொருட்களை வாங்குவார்கள். இந்நிலையில் தான் திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
அதாவது முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் திருச்சி முதன்மை கல்வி அலுவலராக அறிவழகன் என்பவர் இருந்தார். இவரும் சில தலைமயைாசிரியர்களும் சேர்ந்து இந்த நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
கொரோனா தடுப்புக்கான மாஸ்க் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதோடு, பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட போலீஸார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மூலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளிகளில் தலா ரூ.8 லட்சத்துக்கு பொருட்கள் வாங்கியதிலும், 13 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனடிப்படையில், ஆய்வாளர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் திருச்சி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் அப்போதையை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் என 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களாக இருந்த, அறிவழகன், சாந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, காணக்கினியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமையாசிரியர் ஆர்.ராஜேந்திரன், ஊனையூர் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சற்குணன், இனாம்குளத்தூர் பள்ளி தலைமையாசிரியர் எல்.கே.அகிலா, துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியரும், உதவி ஆசிரியருமான டி.டெய்சிராணி, வேம்பனூர் பள்ளி தலைமையாசிரியர் ஜெ.ஜெய்சிங், அழககவுண்டன்பட்டி பள்ளி தலைமையாசிரியர் எஸ்.கண்ணன் ஆகியோர் அடங்குவர்.
இதில், சாந்தி தொடக்கல்வித்துறை இணை இயக்குநராகவும், அறிவழகன் விழுப்புரம் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.