தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண் கூட்டமைப்பு, தேர்வு மோசடியை சுட்டிக்காட்டி அண்மையில் நடைபெற்ற சிபிஎஸ்இ முதல்கட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 350 பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளிகள் மேலாண் கூட்டமைப்பு (CSMA), மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வினாத்தாள் அனுப்பியது உட்பட பல மோசடி சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த முறைகேடுக்கு, மோசமான திட்டமிடல் மற்றும் இந்த ஆண்டு திடீரென புதிய மதிப்பீட்டு முறையை அமல்படுத்தியதே காரணம் என கூறுகிறது.
பெருந்தொற்று காரணமாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. விடையை மட்டும் குறிக்கும் வகையிலான முதல் கட்ட தேர்வு டிசம்பர் மாதத்திலும், விரிவான விடை அளிக்கும் வகையிலான 2 ஆம் கட்ட தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் எனவும் புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், முறைகேடுகளை சுட்டிக்காட்டி முதல்கட்ட பொதுத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
CSMA தனது கடிதத்தில், " இந்த முதல் கட்ட தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அவர்களது திறமை, அறிவின் உண்மையான பிரதிபலிப்பு கிடையாது. இதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் வழங்கப்படவில்லை.
எனவே, முதல்கட்ட பொதுத் தேர்வை உடனடியாக ரத்து செய்வது அவசியமாகும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கி, தற்போது நடைமுறையில் உள்ள குறைபாடுகள் முற்றிலும் சரிசெய்த பிறகு மீண்டும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil