சென்னை அடையாறில் ஐ.ஐ.டி வளாகத்தில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் ஜனவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கல்வித்துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அடையாறில் ஐ ஐ டி வளாகத்தில் மொத்தம் 183 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அண்ணா பல்கலைக்கழகங்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
அடையாறில் உள்ள ஐஐடி வளாகத்தில் பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், " ஐஐடி வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் " கூறினார்.
இதனையடுத்து, சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் இதுவரை 6344 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தமிழக அரசின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.ஐ.டி-மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பொங்கல் திருநாளுக்குப் பிறகு உயர்கல்வி/மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை பள்ளிக்கல்வித் துறை ஒத்திவைக்க யோசித்து வருவதாக கல்வித்துறை வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பள்ளிகளில் ஆன் லைன் வகுப்பு சரிவர நடத்தாமல், கல்விக்கட்டணம் வசூல் செய்வது குறித்து பெற்றோர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் அத்தகைய பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறைக்கான அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுவரை 14 பள்ளிகள் மீது புகார் வந்திருப்பதாகவும், அதில் 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.