பள்ளிப் படிப்பை முடித்து, உங்கள் வாழ்க்கையின் எதிர்கால பயணத்திற்கு அடித்தளமாக அமையவிருக்கும் கல்லூரி பருவத்திற்குள் நுழைவீர்கள். அதில், சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். ஐஐடி போன்ற டாப் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான மாணவர்கள் ஜேஇஇ தேர்வை எழுதியுள்ளனர். தற்போது, முதல்நிலை ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், முதல் இரண்டரை லட்சம் பிடித்த மாணவர்கள் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வை எழுதவுள்ளனர்.
இந்த ஜேஇஇ JoSAA கவுன்சிலிங் செயல்முறையின் போது மாணவர்கள் தங்களது விருப்ப பாடம் மற்றும் கல்லூரியைச் சமர்ப்பிப்பது அவசியமாகும். அதைத் தயார் செய்வதற்கான எளிய வழிமுறைகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
கல்லூரிகள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யலாம்?
ஜேஇஇ ரேங்க் அடிப்படையில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது சவாலான பணியாகும். அதை எளிதாக்கிடச் சிறிய டிப்ஸை கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
சிறந்த பொறியியல் கல்லூரிகளின் கடந்தாண்டு கட்ஆஃப் மார்க்
முதலில், என்ஐஆர்எஃப் தரவரிசைப்படி சிறந்த கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். தொடர்ந்து, அந்தந்த கல்லூரிகளில் சேர்க்கைக்கான சாத்தியமான வாய்ப்புகளை அறிய கடந்தாண்டின் கடைசி கட்ஆஃப் மதிப்பெண் கண்டறிய வேண்டும்.
கல்லூரி கட்டணம் மதிப்பீடு
மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளை ஷார்ட்லிஸ்ட் செய்கையில் முக்கியமானது கல்லூரி கட்டணம் தான். கல்லூரியில் சேர்ந்ததும் கட்டவேண்டிய தொகையை முன்னரே அறிந்துகொள்வது நல்லது. மேலும், நாம் செலுத்திய கட்டண தொகைக்கான அவுட்புட் அந்த கல்லூரியில் சேருவதன் மூலம் கிடைக்குமா என்பதை ஆராய்வது கூடுதல் சிறப்பம்சமாகும்
வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்
பல மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தும், வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். எனவே, கல்லூரியின் பிளேஸ்மென்ட் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.சிறப்பான வேலைவாய்ப்பு கொண்ட கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
கல்லூரியில் வழங்கும் படிப்புகள்
மாணவர்கள் குறிப்பிட்ட படிப்பை முடிவு செய்திருந்தால், கல்லூரிகளைத் தேர்வு செய்வது எளிதாகிவிடும். ஆனால், இரண்டு படிப்புடன் குழப்பத்திலிருந்தால், அந்த இரண்டு படிப்பும் வழங்கும் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். எனவே, விரும்பும் படிப்பு அந்த கல்லூரியில் உள்ளதா என்பதை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.