தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழ் திறனறிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 444 எஸ்.ஐ., பணியிடத்திற்கு 2, 22,213 பேர் விண்ணப்பித் துள்ளனர். தமிழகத்தில் 197 மையங்களில், வரும் 25 காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 3:30 முதல், மாலை 5:10 மணி வரை தமிழ் திறனறிதல் தேர்வும் நடக்க உள்ளது. பொது அறிவுக்கு 70 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திறனறிதல் தேர்வுக்கு 100 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்படும்.
காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 20 % ஒதுக்கீடு வழங்கப்படும். அவர்களுக்கு எழுத்து தேர்வு ஜூன் 26 அன்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
இந்த தேர்வில் புதிய மாற்றத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் செய்துள்ளது. பொது அறிவு மற்றும் தமிழ் திறனறிதல் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும். முதலில் தமிழ் திறனறிதல் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும்.
அதில் விண்ணப்பதாரர் 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து, தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவரது பொது அறிவு தேர்வுக்கான விடைத்தாள் திருத்த எடுத்து கொள்ளப்படும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் எஸ்.ஐ., தேர்வில் இருந்து நீக்கப்படுவார்கள். இதனால் தமிழ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே எஸ்.ஐ., ஆக முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.