/indian-express-tamil/media/media_files/2025/04/29/YLALEpGnUDa99KZywfin.jpg)
நாம் வாழும் இந்த உலகம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போதைய சூழலில் செயற்கை நுண்ணறிவு (AI), துறைகளை மாற்றி அமைத்து வருகிறது. நீங்கள் ஒரு மாணவராகவோ அல்லது வேலை பார்ப்பவராகவோ இருந்தால் உங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை அறிவதற்கு ஏ.ஐ கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ChatGPT தொடங்கப்பட்டதில் இருந்து, ஏ.ஐ பல்வேறு வளர்ச்சியை பெற்று வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 6 free AI courses from Google, Harvard, and IBM to future-proof your career
இந்த சூழலில் நம்முடைய பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், ஏ.ஐ குறித்த அடிப்படை புரிதலாவது இருத்தல் அவசியம். அந்த வகையில் கூகுள் தொடங்கி ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கற்கக் கூடிய 6 ஏ.ஐ படிப்புகளின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
Google AI for Anyone
ஏ.ஐ குறித்து அடிப்படை புரிதலில் இருந்து நீங்கள் தொடங்க நினைத்தால் கூகுள் சார்பாக வழங்கப்படும் AI for Anyone உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். இதனை ஆன்லைன் கல்வி தளமான edX மூலம் கற்கலாம். இதன் சிறப்பம்சமே, நமக்கு உகந்த நேரத்திலும், வேகத்திலும் இதனை கற்றுக் கொள்ள முடியும்.
இதனை கற்றுக் கொள்பவர் வாரத்திற்கு சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவிட்டால், நான்கு வாரங்களில் கற்றுக் கொள்ள முடியும். இதனை கற்பதற்காக கணினி அறிவியல் அல்லது கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் நிறுவனத்தின் ஏ.ஐ தலைவரான லாரன்ஸ் மோரோனி மூலம் இது பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் டேட்டா, அப்ளிகேஷன்கள் போன்றவை குறித்து ஆழமாக கற்பிக்கப்படுகிறது.
ஆண்ட்ரூ என்ஜி வழங்கும் AI for Anyone
ஏ.ஐ குறித்து அறிந்து கொள்வதற்கு இதுவும் ஒரு அடிப்படை படிப்பாகும். இந்தப் பாடத்திட்டம் நான்கு தொகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Coursera மூலம் கற்பிக்கப்படும் இதனை பயின்ற பலரும் 4.8 ரேட்டிங் கொடுத்துள்ளனர். குறிப்பாக, இதனை பயின்றவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. இதைப் பெற்றவர்கள் தங்களது LinkedIn தளத்தில் பகிரலாம்.
ஏ.ஐ என்றால் என்ன?, ஏ.ஐ திட்டங்களை கட்டமைப்பது, நிறுவனங்களுக்கான ஏ.ஐ உருவாக்குவது எப்படி? போன்றவை இந்தப் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளன. இந்தப் படிப்பை புகழ்பெற்ற கணினி விஞ்ஞானியான ஆண்ட்ரூ என்ஜி வழங்குகிறார். இவர், சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான பைடுவில் தலைமை ஏ.ஐ விஞ்ஞானியாகவும், கூகுள் பிரைனின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகிக்கிறார்.
ஐ.பி.எம் வழங்கும் செயற்கை நுண்ணறிவிற்கான அறிமுகம்:
Coursera மூலம் ஐ.பி.எம் வழங்கும் இந்தப் படிப்பு ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். இதனை கற்பவர் தனது வசதிக்கு ஏற்ப பயின்று கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை மற்றும் வணிகத்தில் ஏ.ஐ எவ்வாறு பங்களிக்கிறது மற்றும் அதன் அடிப்படையை புரிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
துறை சார்ந்த வல்லுநர்களிடம் இருந்து இப்படிப்பில் குறிப்புகளை பெற முடியும். இதில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் வழங்கப்படும். மேலும், பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் வழங்கும் பைத்தானுடன் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு:
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழங்கும் மிகவும் பிரபலமான இலவச ஆன்லைன் படிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படிப்பை அணுகுவதற்கான முன்நிபந்தனைகளில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் CS50 இன்ட்ரடக்ஷன் டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை edX பிளாட்ஃபார்ம் மூலம் கற்றவராக இருக்க வேண்டும். ஏ.ஐ அல்காரிதம்கள், இயந்திர மொழிபெயர்ப்பு, கையெழுத்து அறிதல், கேம் விளையாடும் என்ஜின்கள் போன்றவை, இந்த 7 வார படிப்பில் பயிற்றுவிக்கப்படும். இதற்காக வாரத்திற்கு 10 முதல் 30 மணி நேரம் செலவிட வேண்டியதாக இருக்கும்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிற்சியின் பேராசிரியர் கோர்டன் மெக்கே மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் மூத்த ஆசிரியரான டேவிட் ஜே. மலான் ஆகியோர் இதனை பயிற்றுவிக்கின்றனர். ப்ரோகிராமிங் மற்றும் பைத்தான் ஆகியவற்றை ஏ.ஐ மூலம் விரிவாக அறியலாம்.
எஸ்.ஏ.பி மூலம் வழங்கப்படும் ஏ.ஐ
சாஃப்ட்வேர் தொழில் நிறுவனமான எஸ்.ஏ.பி இதனை வழங்குகிறது. தொழில்துறையை ஏ.ஐ மூலம் மேம்படுத்துவது தொடர்பாக இதில் பயிற்றுவிக்கப்படும். இதனை கற்கும் மாணவர்கள் தங்களது நேரத்திற்கு ஏற்ப இதை கற்றுக் கொள்ளலாம். ஆனால், இதில் இருந்து சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை.
கூகுள் கிளவுட் மூலம் வழங்கப்படும் ஜெனரேட்டிவ் ஏ.ஐ:
மைக்ரோ-லேர்னிங் முறையில் 45 நிமிடங்களில் இதை கற்க முடியும். ஏ.ஐ என்பது என்ன?, அது எவ்வாறு இயங்குகிறது? மற்றும் இயந்திரக் கற்றலுக்கான பாரம்பரிய அணுகுமுறைகளிலிருந்து எந்த அளவிற்கு மாறுபட்டது என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, இதை கற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.