கோவையில் முதன் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போர்டுகள் தொழில் நுட்பம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு பள்ளிகளில், ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.
இந்த நவீன தொழில்நுட்பம் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாடு முழுவதும் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் இந்த தொழில் நுட்பத்தை கோவையில் முதன் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியான வெரைட்டிஹால் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நாற்பது ஸ்மார்ட் போர்டுகள் நிறுவப்பட்டு வகுப்பறைகளில் இதற்கான பயன்பாடு துவங்கியது. இதனை சி.எஸ்.ஐ.கோயமுத்தூர் மறை மாவட்ட தலைவர் மற்றும் பேராயர் திமோத்தி ரவீந்தர் கலந்து கொண்டு ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாட்டை வகுப்பறைகளில் துவக்கி வைத்தார்.
இதே போல பள்ளியில் மின்சார உபயோகத்திற்கான புதிதாக நிறுவப்பட்ட சோலார் பேனல்களும் துவங்கப்பட்டன. ஸ்மார்ட் போர்டுகளால் தற்போதைய மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் காட்சி கூறுகளை முன்வைப்பதன் மூலம் மாணவர்களுக்கு வளமான கற்றல் அனுபவத்தை வழங்குவதாகவும், குறிப்பாக மாணவர்களின் கற்றல் அனுபவம் இந்த தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
ஸ்மார்ட் போர்டுகள் மூலம் மாணவர்கள் வரைபடங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை அவர்களுக்கு முன்னால் உள்ள பெரிய திரையில் பார்க்கும் திறனைக் கொண்டுள்ளதால், அவர்களின் கற்றல் திறன் கூடுதலாக மேம்படும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“