பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்பணி (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர்கள் (MTS – Non-Techinical) தேர்வு, 2022 மற்றும் CHSL தேர்வு, 2022 ஆகியவற்றை 13 பிராந்திய மொழிகளில் நடத்த பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) இன்று ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய 13 பிராந்திய மொழிகளில் வினாத்தாள் அமைக்கப்படும்.
இதையும் படியுங்கள்: SSC CGL 2023: பட்டதாரிகளுக்கு 7500 பணியிடங்கள்; தேர்வு முறை- சிலபஸ் எப்படி?
இதன் மூலம், இந்தப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் லட்சக்கணக்கான ஆர்வலர்கள் தங்கள் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத முடியும்.
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) / ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) பிராந்திய மொழிகளில் தேர்வுகளை நடத்துவதைப் போல 15 மொழிகளில் (13 பிராந்திய மொழிகள் + இந்தி + ஆங்கிலம்) MTS தேர்வு, 2022 மற்றும் CHSLE 2022 தேர்வு ஆகியவற்றை நடத்த பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. MTS தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் CHSL தேர்வின் பல மொழிகள் குறித்த அறிவிப்பு மே-ஜூன் 2023 இல் வெளியிடப்படும்.
ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர பிராந்திய மொழிகளில் எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் திட்டம் மற்றும் பாடத்திட்டத்தின் மதிப்பாய்வு உள்ளிட்ட விஷயங்களுடன் இந்த அம்சத்தையும் ஆய்வு செய்ய அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.
நிபுணர் குழு அதன் அறிக்கையில் பின்வருவனவற்றைப் பரிந்துரைத்தது: “எஸ்.எஸ்.சி.,யின் குறிப்பாக குரூப் ‘சி’ பதவிகளின் ஆய்வு, இந்தப் பதவிகள் அரசு மற்றும் குடிமகனுக்கு இடையே நெருக்கமான தொடர்பு தேவைப்படுவதைக் குறிக்கிறது. இந்தியா பல மொழிகள் பேசும் நாடாக இருப்பதால், 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தகுதிகளுக்கான தேர்வுகளை பல மொழிகளில் நடத்துவது பொருத்தமானதாக இருக்கும். ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) / வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தங்கள் தேர்வுகளில் பயன்படுத்தும் 14 மொழிகளில் எஸ்.எஸ்.சி முதலில் தேர்வுகளை தொடங்கி, பின்னர் படிப்படியாக அரசியலமைப்பின் அட்டவணை VIII இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் சேர்க்கலாம்.”
அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் இறுதியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கும், அரசியலமைப்பின் கொள்கைகளை உணர்ந்துகொள்வதற்கும், நமது தேசத்தின் மொழியியல் வகையை அங்கீகரித்து மதிப்பிடுவதற்கும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமமான வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்ய SSC தொடர்ந்து செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil