/indian-express-tamil/media/media_files/2025/09/19/ssn-college-of-engineering-and-technology-2025-09-19-15-40-20.jpg)
SSN college to be merged with Shiv Nadar univ
சென்னை: தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான எஸ்.எஸ்.என். (SSN) பொறியியல் கல்லூரி, அடுத்த கல்வி ஆண்டு (2026-27) முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த கல்லூரி, அதன் அருகில் இயங்கிவரும் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் படிப்படியாக இணைக்கப்படவுள்ளது. இந்த இணைப்புக்குப் பிறகு, இது சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் கீழ் எஸ்.எஸ்.என். பொறியியல் பள்ளி என அழைக்கப்படும்.
மாறும் சேர்க்கை மற்றும் கட்டண நடைமுறைகள்
தற்போது, எஸ்.எஸ்.என் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்குள்ள 65% இடங்கள் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணம் ₹55,000 ஆகும்.
ஆனால், இந்த இணைப்புக்குப் பிறகு, பி.டெக் மற்றும் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். கட்டண அமைப்பும் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் நடைமுறைக்கு ஏற்ப ₹3.5 லட்சம் ஆக உயரும்.
தற்போதைய மாணவர்களின் நிலை என்ன?
2025-26 கல்வி ஆண்டில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், வழக்கம் போல அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் படித்துப் பட்டம் பெறுவார்கள் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எஸ்.எஸ்.என் கல்லூரி நிர்வாகம், கல்லூரியை மாற்றம் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளது. மாநில அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்த பிறகு, அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கும்.
எச்.சி. எல் நிறுவனர் ஷிவ் நாடாரால் 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி, சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் 230 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதிநவீன வசதிகள், தரமான கல்வி, மற்றும் 95%க்கும் அதிகமான மாணவர்களுக்கு வளாகத் தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதன் மூலம் இந்தக் கல்லூரி பரவலாக அறியப்படுகிறது. ”உலகத் தரம் வாய்ந்த, பன்முகப் பாடங்களைக் கொண்ட ஒரே ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கவே இந்த இணைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என எஸ்.எஸ்.என் நிர்வாக செய்தித் தொடர்பாளர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.