/indian-express-tamil/media/media_files/s4RmKpQFLWzf0e8wFgCc.jpg)
தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் எனப்படும் (SSN) ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, அடுத்த கல்வியாண்டிலிருந்து (2026-27) ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் படிப்படியாக இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதன்மை கல்லூரியாக இருந்து வந்தது எஸ்.எஸ்.என் கல்லூரி. அண்ணா பல்கலைக்கழக வளாகங்களுக்குப் பிறகு மாணவர்கள் அதிகம் விரும்பி சேர்வது இந்தக் கல்லூரியில் தான். தன்னாட்சி பெற்ற இந்தக் கல்லூரியில் 65% இடங்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் நிரப்பப்பட்டு வந்தது. இங்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.55,000 கல்விக் கட்டணமாக இருந்து வந்தது.
எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி 1996 ஆம் ஆண்டு எச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் மற்றும் தலைவரான ஷிவ் நாடார் அவர்களால் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள காலவாக்கத்தில் 230 ஏக்கர் வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி தரமான பொறியியல் கல்வியை வழங்குவதாகவும், கேம்பஸ் இன்டர்வியூக்களின் போது 95% க்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்று தரும் சிறந்த நிறுவனமாகவும் விளங்கி வருகிறது.
இந்தநிலையில், இந்த எஸ்.எஸ்.என் கல்லூரி அடுத்த கல்வியாண்டிலிருந்து ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் படிப்படியாக இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த கல்வியாண்டிலிருந்து எஸ்.எஸ்.என் கல்லூரிக்கு ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் பி.டெக் (B.Tech) மற்றும் எம்.டெக் (M.Tech) படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்தும். எனவே இந்த நிறுவனத்தில் சேர விரும்பும் மாணவர்கள் சேர்க்கை பெற நுழைவுத் தேர்வை எழுதி நேர்காணலில் தேர்ச்சி பெற வேண்டும்.
அடுத்து கல்வி ஆண்டு முதல் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டாலும், 2025-26 கல்வியாண்டில், எஸ்.எஸ்.என் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த சுமார் 900 மாணவர்கள் அடுத்த நான்கு ஆண்டுகள் படித்த பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியிடமிருந்து படிப்படியாக வெளியேறுவற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. மாநில அரசிடமிருந்து ஆட்சேபனையில்லாச் சான்றிதழைப் பெற்ற பிறகு கல்லூரி வெளியேறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், பொறியியல், பொருளாதாரம் மற்றும் பிற துறைகளில் படிப்புகளை வழங்குகிறது. பலதரப்பட்ட படிப்புகளை வழங்கும் ஒரு உலகத் தரம் வாய்ந்த நிறுவனத்தை உருவாக்க, ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தையும் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியையும் இணைக்க விரும்பினோம், என்று எஸ்.எஸ்.என் நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், எஸ்.எஸ்.என் கல்லூரி ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கீழ் எஸ்.எஸ்.என் பொறியியல் பள்ளி என்று அழைக்கப்படும். சேர்க்கை முறை மாறும், மேலும் சேர்க்கை செயல்முறை மற்றும் கட்டண அமைப்பு ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் ஒத்துப்போகும், என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார். தற்போது ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சமாக இருந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.