மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்குப் பதிலாக, மாநிலத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், ’புதிய கல்விக் கொள்கை முறையில், தமிழ் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும். இனி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். நடப்பு கல்வியாண்டு முதலே 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 11ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், தங்களை பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஆண்டாக 11ஆம் வகுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குழுவின் பரிந்துரைகள்:
இந்த மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைக் கேட்டறிந்து, விரிவான ஒரு அறிக்கையைத் தயாரித்தது.
இந்த அறிக்கையில், இருமொழிக் கொள்கையைத் தொடர்வது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்பது போன்ற பல முக்கியப் பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில், முதற்கட்டமாக பள்ளிக் கல்வித் துறைக்கான கொள்கை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.