New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/21/jcG6M2OItb2tWugvFe2b.jpg)
சி.பி.எஸ்.இ பள்ளிகளை தொடங்க வரும் கல்வி ஆண்டு முதல் மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என புதிய திருத்தத்தை சி.பி.எஸ்.இ (CBSE) கொண்டு வந்துள்ளது.
சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் தனியார் பள்ளிகள் தொடங்க அந்தந்த மாநிலத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (No objection Certificate) பெற வேண்டும். குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த சான்றிதழ் மாநில அரசிடம் இருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் பின்னரே தனியார் பள்ளி தொடங்க சி.பி.எஸ்.இ வாரியத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இந்த நடைமுறையில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ இணைப்பு விதிகள் 2018 இல் இதற்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 26.12.2024 அன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, வாரியத்தின் கட்டுப்பாட்டு அதிகாரத்தின் கீழ் ஒப்பதல் பெறப்பட்டது. அதன்படி, 2.1.5, 2.1.6, 2.1.7 மற்றும் 2.1.8 ஆகிய பிரிவின் கீழ் வாரியத்திடன் இணைப்பு பெற பள்ளிகள் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையில்லா சான்றிதழ் உடனும், தடையில்லா சான்றிதழ் இல்லாமலும் இனி SARAS இணையதளத்தில் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருத்தம் வரும் 2026-27 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், புதிய திருத்தத்தின்படி, தடையில்லா சான்றிதழ் பெறாமல் பள்ளி தொடங்க விண்ணப்பம் பெறப்படும் நிலையில், சி.பி.எஸ்.இ சம்மந்தப்பட்ட மாநில அரசுக்கு ஆட்சேபனை ஏதேனும் உள்ளதா என்ற கடிதத்தை அனுப்பும். அதற்கு மாநில அரசு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அப்படி பதில் ஏதும் பெறப்படாத நிலையில், மீண்டும் அந்த மாநில கல்வித்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பப்படும். அதற்கு கல்வித்துறை 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இதிலும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை எனில், மாநில அரசிற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என எடுத்துக் கொள்ளப்படும். மேலும், பள்ளி தொடங்க அனுமதி கேட்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ வாரியத்தின் கீழ் தனியார் பள்ளி தொடங்க மாநில அரசிடம் முதல் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றுவது மாநில அதிகாரத்தை பறிப்பதாக உள்ளதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
“பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வித்துறையில் ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக ஆதிக்கம் செலுத்துவது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு வேட்டு வைக்கும் நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி திட்டத்தையும் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்குவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்று விதிகளை திருத்துவது ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கான இன்னொரு செயல் திட்டம் தான் என்பதில் ஐயமில்லை” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.