ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்த்தவர் என் பி தீக்ஷா. இவரின் தந்தை பாலச்சந்திரன் பல் மருத்துவராக பணிபுரிகின்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் தீக்ஷா நீட் தேர்வில் 610 மதிப்பெண் எடுத்துள்ளதாக கூறி போலி நீட் மதிப்பெண் சான்றிதழை அவரது தந்தை சமர்ப்பித்துள்ளார். ஆனால் நீட் தேர்வில் தீக்ஷா வெறும் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளார். மற்றும் நீட் தேர்வில் 610 மதிப்பெண் எடுத்தது கீர்த்திகா என்பவர் தான் என்று பின்னரே தெரியவந்துள்ளது. அதோடு கீர்த்திகாவின் புகைப்படத்திற்கு பதிலாக தீக்ஷாவின் புகைப்படத்தை மாற்றி நீட் சான்றிதழை சமர்ப்பித்ததும் வெளிவந்துள்ளது. இந்த தகவல் வெளியில் தெரிந்ததும் தந்தை, மகள் இருவரும் தலைமறைவாகி இருந்தனர்.
எனவே மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் மற்றும் தேர்வுக் குழுவின் செயலாளர் மருத்துவர் ஜி செல்வராஜன் இவர்கள் இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தந்தை, மகள் இருவரின் மீதும் பெரியமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வலை வீசித் தேடி வந்தனர். இதில் தந்தை பாலச்சந்திரன் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் மகள் தீக்ஷா குடும்பத்தினருடன் ஓட்டலில் தலைமறைவாகி இருப்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது. எனவே மகள் தீக்ஷா நேற்று
(திங்கள் கிழமை) போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"