2021 ஆம் ஆண்டில் தற்கொலையால் இறந்த மாணவர்களின் எண்ணிக்கை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் 2021 ஆம் ஆண்டில் 1,834 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்தப்படியாக மத்தியப் பிரதேசத்தில் 1,308 மாணவர்கள், மற்றும் தமிழ்நாட்டில் 1,246 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மாணவர்களின் தற்கொலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் என்.சி.ஆர்.பி.,யின் 2021 இன் இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலை அறிக்கை (ADSI) காட்டுகிறது.
இதையும் படியுங்கள்: 10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு; மத்திய அரசு திட்டம்
2020 ஆம் ஆண்டில், 12,526 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர், அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 13,089 ஆக உயர்ந்துள்ளது. 2017 மற்றும் 2019 க்கு இடையில், நாட்டின் மொத்த தற்கொலைகளில் மாணவர்களின் தற்கொலைகள் 7.40 சதவீதம் முதல் 7.60 சதவீதம் வரை இருந்தது. இது 2020ல் 8.20 சதவீதமாக அதிகரித்து, 2021ல் 8 சதவீதமாக குறைந்துள்ளது.
மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டமைக்கான குறிப்பிட்ட காரணங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எவ்வாறாயினும், தற்கொலை செய்து கொண்ட 18 வயதுக்குட்பட்ட 10,732 மாணவர்களில் 864 பேர் ‘தேர்வில் தோல்வி’ காரணமாக இறந்தவர்கள் என்று அறிக்கை கூறுகிறது. 18 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலைக்கு மிகப்பெரிய காரணம் "குடும்பப் பிரச்சனைகள்" ஆகும்.
2017ஆம் ஆண்டு முதல், மாணவர்களின் தற்கொலை மரணம் 32.15 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் மொத்த மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 9,905 ஆகும்.
மொத்த மாணவர் தற்கொலைகளில் பெண் மாணவிகளின் தற்கொலை சதவீதம் 43.49 சதவீதமாகவும், ஆண் மாணவர்களின் தற்கொலை சதவீதம் 56.51 சதவீதமாகவும் உள்ளது. ஆண் மாணவர்களின் தற்கொலைகளை விட மாணவிகளின் தற்கொலைகள் ஐந்தாண்டுகளில் குறைந்த அளவாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. 2017-ல் 4,711 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2021-ல் 5,693-ஆக அதிகரித்துள்ளது.
என்.சி.ஆர்.பி அறிக்கை தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களின் கல்வி நிலையைக் காட்டுகிறது. "மொத்த தற்கொலையால் பாதிக்கப்பட்டவர்களில் 4.6% மட்டுமே பட்டதாரிகள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள்". பாதிக்கப்பட்டவர்களில் 11 சதவீதம் பேர் படிப்பறிவில்லாதவர்கள் என்றும், 15.8 சதவீதம் பேர் ஆரம்ப நிலை வரை படித்தவர்கள் என்றும் என்.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் தற்கொலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2020-ல் இருந்து 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ல் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று அறிக்கை காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.