திருவெறும்பூர் அருகே அசூர் ஊராட்சிக்குட்பட்ட பொய்கைகுடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக மளிகை கடை நடத்தி வருபவர் சண்முகம் (55) இவரது மனைவி சத்திய சுந்தரி (49) இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
கடந்த ஆறு மாத காலமாக சண்முகம் மூச்சு திணறல் காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சு திணறல் அதிகமானதால் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அப்பொழுது அவரது நான்காவது மகளான பழங்கனாங்குடி ஊராட்சி தேன்நீர் பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு கணினி பிரிவில் படிக்கும் மகள் ஷாலினி(15) அவருடன் இருந்தார். மேலும் அப்பொழுது தனது உயிர் பிரியும் நேரத்தில் சண்முகம் தனது மகளை அழைத்து கல்விதான் உன்னை உயர்த்தும் என்றும் நீ படி என்று பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் உயிர் துறந்தார்.
தனது தந்தையின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து தனது இல்லத்திற்கு வந்து தான் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பெல் வளாகத்திலுள்ள பாய்லர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி உள்ளார்.
மேலும், இதுகுறித்து ஷாலினிடம் கேட்டபோது எனது தந்தை இறக்கும்போது நீ படி என்று கூறினார், அவரது சொல்லை நிறைவேற்றும் வகையில் நான் தேர்வெழுத வந்ததாக கண்ணீர் மல்க பள்ளி வளாகத்தில் கூறிவிட்டு தேர்வுக்கு கிளம்பிச் சென்றார்.
உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனையில் தனது உயிர் பிரியும் நிலையில் தனது மகளிடம் நன்றாக படி என்ற கூறிய வார்த்தையை நிறைவேற்றும் வகையில் தந்தை இறந்தும் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி தேர்வரைக்கு சென்று தேர்வு எழுதிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்