கொரோனா வைரஸ் தொறு நோய் காலத்தில், கோவாவில் ஒரு மாணவர்கள் குழு, ஆன்லைன் வகுப்புகளுக்காக இணையத்திற்கான நெட்வொர்க் சிக்னல் சீராக கிடைக்க வேண்டும் என்பதற்காக வனவிலங்குகள் சரணாலயத்திற்குள் இருக்கும் மலை உச்சிக்கு 3 கி.மீ தொலை நடந்து சென்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பல இடங்களில் செல்போன் இணைய வசதிகளை வழங்கும் நிறுவனங்களின் நெட்வொர்க் சீராக கிடைக்காததால் நெட்வொர்க் கிடைக்கும் இடங்களைத் தேடி மாணவர்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கோவாவில், ஒரு மாணவர்கள் குழு, ஆன்லைன் வகுப்புகளுக்காக சீராக நெட்வொர்க் கிடைக்கும் இடத்தை தேடி, விலங்குகள் சரணாலயத்திற்குள்ளே இருக்கும் மலை உச்சிக்கு 3 கி.மீ நடந்து செல்கின்றனர்.
தெற்கு கோவா சங்குவெம் தாலுக்காவில் உள்ள மலை உச்சிக்கு பெண்கள் உள்பட 25 மாணவர்கள் காட்டு வழியாக செல்லும் ஆபத்தை பொருட்படுத்தாமல் ஆன்லைன் வகுப்புகளுக்காக சிலமாதங்களாக மலை உச்சிக்கு தினமும் நடந்து சென்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக கடலோர மாநிலமான கோவாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மார்ச் இறுதி முதல் மூடப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் கல்வி கற்பதற்கு வகுப்புகள் ஆன்லைனில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் சீரான இணைய இணைப்பு தேவைப்படுகிறது.
பனாஜிக்கு கிட்டத்தட்ட 100 கி.மீ தெற்கே அமைந்துள்ள சங்குவெம் தாலுகாவில் உள்ள குமாரி, பத்ரே போன்ற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், நேத்ராவலி வனவிலங்கு சரணாலயத்திற்குள் உள்ள குமாரி மலை உச்சியை அடைவதற்கு தினமும் 3 கி.மீ நடந்து வருகின்றனர்.
நாங்கள் காலை 8.10 மணியளவில் இங்கு வந்து எங்கள் வகுப்புகள் முடிந்ததும் மதியம் 1 மணியளவில் வீடு திரும்புவதாக பனாஜியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள வெர்னா கிராமத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் நீலிமா ஏக்டோ கூறினார்.
மாணவர்கள், வனவிலங்கு சரணாலயத்திற்குள் மலையின் தரிசான மேட்டுப் பகுதியில் பாறைகள் மீது தங்குமிடம் இல்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்.
“மழை பெய்யும்போது, நனைந்து போகாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள குடைகளுடன் உட்கார வேண்டும். மழை பெய்யும்போது, எவ்வளவு நேரம் என்று அளவு இல்லை. எங்கள் வகுப்புகளை மீண்டும் தொடங்க மழை பெய்வது நிற்கும் வரை காத்திருக்க வேண்டும்” நீலிமா எக்டோ கூறினார்.
இப்பகுதியில் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மொபைல் கோபுரங்கள் உள்ளன. ஆனால், உள்ளூர்வாசிகள் இணைய இணைப்பு பெரும்பாலும் மோசமாக உள்ளது என்று கூறுகின்றனர்.
கியூபெமில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கும் பிரவீதா கோங்கார் மேட்டுப்பகுதிகளில் பெரும்பாலும் பாம்புகளை பார்ப்பதாகக் கூறினார். பல பாம்புகள் பீடபூமியில் ஊர்ந்து செல்வதைக் கண்டோம் என்றார்.
மேலும் அவர், எங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிட முடியாது என்பதால் இங்கே வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, இப்பகுதியில் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல் கோபுரங்களும் செயல்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டபோது, இப்பகுதியில் உள்ள அனைத்து பி.எஸ்.என்.எல் கோபுரங்களும் செயல்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"