Srinidhi Balakrishnan
அமெரிக்காவில் பட்டதாரி படிப்பைத் தொடரத் தயாராகும் இந்தியர்களிடையே, பொறியியல் படிப்பை விட மிகவும் பிரபலமான பட்டப்படிப்புத் தேர்வாக இயற்பியல் அறிவியல் மாறி வருகிறது.
பொறியியல் பட்டதாரி பதிவுத் தேர்வை (GRE) எழுதும் இந்திய மாணவர்களின் சதவீதம் சுருங்கி வருவதை தரவு காட்டுகிறது. அதே நேரத்தில், இயற்பியல், வேதியியல் மற்றும் புவி அறிவியல் உள்ளிட்ட இயற்பியல் அறிவியல்கள் இப்போது பட்டப்படிப்புக்கான மிகவும் பிரபலமான தேர்வாக உள்ளன. இந்தத் தரவு தேர்வின் போது தங்களுக்குத் தேவையான பட்டதாரி மேஜரைக் குறிப்பிட்ட தேர்வாளர்களை மட்டுமே பிரதிபலிக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்தியர்கள்; ஜி.ஆர்.இ தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
GRE என்பது முக்கியமாக அமெரிக்காவில் முதுகலை (அமெரிக்காவில் பட்டதாரி என அழைக்கப்படும்) படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களும் GRE மதிப்பெண்களை ஏற்கின்றன. உலகெங்கிலும் உள்ள விண்ணப்பதாரர்களை ஒப்பிடுவதற்கான பொதுவான அளவுகோலை இது பல்கலைக்கழகங்களுக்கு வழங்குகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கல்வி சோதனை சேவைகள் (ETS) நடத்தும் GRE தேர்வு, கணிதம், வாசிப்பு மற்றும் எழுதுதல் ஆகியவற்றில் திறமையை மதிப்பிடுகிறது.
அமெரிக்காவில் பொறியியல் படிப்பதில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் சரிவு குறிப்பிடத்தக்கது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு 34% ஆக இருந்து 22021-22 ஆம் ஆண்டில் 17% ஆக குறைந்துள்ளது. இதற்கு மாறாக, இயற்பியல் அறிவியலில் ஆர்வமுள்ள GRE விண்ணப்பதாரர்கள் அதே காலகட்டத்தில் 27% இலிருந்து 37% ஆக அதிகரித்துள்ளனர்.
வெளிநாட்டு ஆலோசனை நிறுவனம் மான்யா - தி பிரின்ஸ்டன் ரிவ்யூ, அமெரிக்காவில் உள்ள இயற்பியல் அறிவியல் பட்டதாரி படிப்புகளுக்கு பொறியியலைக் காட்டிலும் GRE மதிப்பெண்கள் அவசியம் தேவைப்படுவது இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. “உதாரணமாக, UCLA (கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்), இயற்பியல் மற்றும் வேதியியல் பட்டதாரி படிப்புகளுக்கு GRE தேவைப்படுகிறது, அதேசமயம் மின் மற்றும் கணினி பொறியியல், கணினி பொறியியல், இயந்திர பொறியியல் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு இது கட்டாயமாக தேவையில்லை." என்று மான்யா - தி பிரின்ஸ்டன் சேர்க்கை பிரிவு தலைவர் ஜி சாரதா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இயற்பியல் அறிவியலின் எழுச்சிக்கு எதிரான பொறியியலின் சரிவு அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் இலாப நோக்கற்ற சர்வதேச கல்வி நிறுவனத்தின் தரவுகளை தொகுத்த ஓபன் டோர்ஸ் அறிக்கையால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது அமெரிக்காவில் பொறியியல் படிக்கும் இந்தியர்களின் விகிதம் 2009-10ல் 38.8% ஆக இருந்து 2021-22ல் 29.6% ஆக குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
“பிடெக் பட்டதாரிகள் இந்தியாவில் நல்ல மற்றும் அதிக ஊதியம் பெறும் வேலைகளில் சேர்கிறார்கள். கல்லூரிக்குப் பிறகு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் பேக்கேஜ் பெறுவது இப்போது சாதாரணமாகிவிட்டது; இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இது இல்லை. அமெரிக்காவில் பொறியியல் படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் இருந்ததைப் போல இல்லாமல் இருப்பதற்கு காரணம் இதுதான். உண்மையில், அறிவியலில் முதுகலைப் பட்டங்களை <வெளிநாட்டில்> தொடரும் இந்தியர்களின் அதிகரிப்பை நீங்கள் இப்போது காண்பீர்கள், ஏனெனில் இந்தியாவில் அந்த துறையில் வேலை வாய்ப்புகள் சிறப்பாக இல்லை, ”என்று ஐ.ஐ.டி ஹைதராபாத் இயக்குனர் பி.எஸ் மூர்த்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், அதிகமான மாணவர்கள் வணிகவியல் படிப்பை தேர்வு செய்கின்றனர். 2012-13 ஆம் ஆண்டில், வணிகத்தில் முதுகலைப் பட்டம் பெற விரும்பி மட்டுமே 1,697 பேர் GRE தேர்வு எழுதினர். 2021-22ல், இந்த எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்து, 7,912ஐ எட்டியது. மனிதநேயம் மற்றும் கலைப் பாடங்களைத் தேடுபவர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே தேர்வாளர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே உருவாக்குகிறது, இது 2012-13 இல் 0.3% ஆக இருந்து 2020-21 மற்றும் 2021-22 இல் தேர்வெழுதியவர்களில் வெறும் 0.1% ஆகக் குறைந்துள்ளது.
வாழ்க்கை அறிவியலுக்கும் இதையே கூறலாம். 2012-13 ஆம் ஆண்டில், இந்த மாணவர்கள் தேர்வெழுதியவர்களில் 5% ஆக இருந்தனர். இது தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது. ETS இன் உலகளாவிய உயர்கல்வியின் இணைத் துணைத் தலைவர் ஆல்பர்டோ அசெரிடா, ”கோவிட்-19 இன் தாக்கம் போன்ற பரந்த பொருளாதார மற்றும் சமூக காரணிகளுக்கு மேலதிகமாக, சில உயிரியல் மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு இனி GRE தேவைப்படாது என்பதற்கு இந்த போக்கு ஓரளவு காரணமாக இருக்கலாம்,” என்று கூறினார்.
மான்யாவைச் சேர்ந்த சாரதா, வாழ்க்கை அறிவியல் படிப்புகள் GRE யிலிருந்து விலகிய இந்த மாற்றத்தை, GRE மதிப்பெண்களுக்கும் பயோமெடிக்கல் சார்ந்த PhD படிப்புகளில் வெற்றிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட தொடர்பைக் கண்டறிந்த, 2017 ஆம் ஆண்டு வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் மற்றும் நார்த் கரோலினா, சார்லோட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் ஓரளவு விளக்க முடியும் என்று பரிந்துரைத்தார். இதன் விளைவாக, உயிரியல், மருத்துவம் மற்றும் தொடர்புடைய படிப்புகளில் சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக GRE மதிப்பெண்களைக் கருத்தில் கொள்வது குறைவு.
ஓபன் டோர்ஸ் அறிக்கை மீண்டும் குறைவான மாணவர்களே வாழ்க்கை அறிவியலைத் தொடர விரும்புகின்றனர் என்பதை பிரதிபலிக்கிறது. 2013-14ல் 10 சதவீதமாக இருந்த உயிர் அறிவியல் படிப்புகளில் சேர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை 2021-22ல் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், தேர்வின் போது உத்தேசமாக தேர்வு செய்துள்ள பட்டதாரி மேஜர்களை மட்டுமே தரவு கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்பதை ETS வலியுறுத்துகிறது; பதிவு செய்தவுடன் பாடங்கள் மாறலாம்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் இந்தியர்கள் இரண்டாவது பெரிய குழுவாக உள்ளனர். 2021-22 ஆம் ஆண்டில், இந்தியா 199,182 மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 18.9% அதிகமாகும். பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை, குறிப்பாக, குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது: 2021-22ல் 48% அதிகரித்து 1,02,024 ஆக இருந்தது. இது இந்தியாவில் GRE இன் அதிகரித்துவரும் பிரபலத்துடன் தொடர்புடையது; கடந்த ஆண்டில் இந்தியாவில் 1,11,476 பேர் தேர்வெழுதி சாதனை படைத்துள்ளனர், இது சீனாவை விட இரண்டு மடங்கு அதிகம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.