Advertisment

ஒரு கேள்விக்கு 2 பதில்கள் சரியானதாக இருக்க முடியாது; நீட் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

நீட் தேர்வு வழக்கு; இயற்பியலில் ஒரு கேள்விக்கு 2 விடைகள் சரியானதாக கருதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு; ஐ.ஐ.டி டெல்லி நிபுணர் குழு ஆராய்ந்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
NEET UG 2024 SC Hearing News Updates in tamil

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான 2024 நீட் தேர்வு (NEET UG 2024) வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை திங்களன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்வில் ஒரு கேள்விக்கான பதில்களில் தெளிவற்ற ஆப்ஷன்கள் இருந்ததாக ஒரு மனுதாரர் தொடர்ந்த வழக்கையும் விசாரித்தது.

Advertisment

மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அதிக டாப்பர்கள், தேர்வு நடைமுறைகளில் குளறுபடி, மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்டவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

அதில், மே 5 தேர்வு "புனிதத்தை" "பெரிய அளவில்" இழந்திருந்தால் மட்டுமே, ஒரு முழுமையான மறு தேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று மனுதாரர்களுக்கு ஒரு எச்சரிக்கையுடன் நீதிமன்றம் கடந்த வாரம் விசாரணையை முடித்தது.

இதற்கிடையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்துள்ளது. அதேநேரம், கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஐ.ஐ.டி சென்னையின் பகுப்பாய்வைக் குறிப்பிட்டு மத்திய அரசாங்கம், "பெரிய முறைகேடு" பற்றிய எந்த அறிகுறியும் இல்லை அல்லது சில தேர்வர்கள் மோசடியால் பயனடைந்ததற்கான ஆதாரமும் இல்லை” என்று வலியுறுத்தியது.

அதேநேரம் நீட் தேர்வின் நகர வாரியான மற்றும் மைய வாரியான முடிவுகளை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, சனிக்கிழமை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

இந்தநிலையில், நீட் தேர்வு வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வினாத்தாள் கசிவு விவகாரத்தோடு, வினா எண் 29க்கு தெளிவற்ற ஆப்ஷன்கள் இருந்ததாக ஒரு மனுதாரர் தொடர்ந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இந்த தெளிவின்மையின் விளைவுகள், தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்களைக் கொண்ட போட்டித் தேர்வின் சூழலில் குறிப்பிடத்தக்கவை என்று மனுதாரர் வாதிட்டார். இதன் விளைவாக, 'தவறான' விடையைத் தேர்ந்தெடுத்த 44 மாணவர்களுக்கு 'கிரேஸ் மார்க்' (கருணை மதிப்பெண்கள்) வழங்கப்பட்டு 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதேநேரம், மனுதாரர் கேள்விக்கு பதிலளிக்காமல் 720க்கு 711 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, அந்தக் கேள்விக்கு மதிப்பெண் வழங்க மறுத்திருந்தால், மனுதாரர் அதிக சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பார், மாறாக, "தெளிவற்ற" ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் தேசிய தேர்வு முகமை முழு மதிப்பெண்களை வழங்கியது என்று மனுதாரரின் சார்பில் வாதிடப்பட்டது.

"... 'ஆப்ஷன் 2'க்கு கூட விடையளித்தவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதன் மூலம், நீங்கள் டாப்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்கள்.. (இது) மனுதாரரின் வாதம்," என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியது.

மனுதாரரின் வாதத்தை சக்திவாய்ந்ததாக அங்கீகரித்த நீதிமன்றம், தேசிய தேர்வு முகமையின் தேர்வுக்கு முந்தைய அறிவுறுத்தலைச் சுட்டிக்காட்டி, பாடப்புத்தகத்தின் புதிய, திருத்தப்பட்ட பதிப்பைப் பின்பற்ற வேண்டும் என்பது அறிவுறுத்தல் என்று கூறியது. சமீபத்திய என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகத்தின்படி 'ஆப்ஷன் 4' சரியான விடையாக இருந்தால், 'ஆப்ஷன் 2' என்று பதிலளித்தவர்கள் எப்படி முழு மதிப்பெண்களைப் பெறுவார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, நிபுணர்களின் கருத்தை, நீதிமன்றம் கேட்டது. "மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்குமாறு ஐ.ஐ.டி டெல்லியின் இயக்குநரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்... சரியான ஆப்ஷன் குறித்த கருத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறிய நீதிமன்றம், இந்த கருத்தை நாளை நண்பகல்க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தது.

"இரண்டு சரியான பதில்கள் இருப்பதாகக் கருத முடியாது" என்றும், இரண்டிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படாது என்று மனுதாரர் கருதியுள்ளார். தர்க்கரீதியாக, ஒன்று மட்டுமே சரியானதாக இருக்க முடியும் என்றும், நெகட்டிவ் மார்க் இருக்கும் நிலையில், மதிப்பெண்களை இழப்பதற்குப் பதிலாக பதிலளிக்காமல் இருக்க மனுதாரர் முடிவு செய்தார்,” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், "இந்தக் கேள்வியைத் தவிர, மற்ற கேள்விகளுக்கு நான் மிகவும் சிறப்பாக பதிலளித்துள்ளேன். நான் 311 வது இடத்தைப் பிடித்துள்ளேன்... இந்தக் கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்தால், நான் மேலே செல்வேன்," என்று மனுதாரர் கேள்வியை நீக்குவதற்கான தனது கோரிக்கையின் முந்தைய தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.

அப்போது, தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், "தேசிய தேர்வு முகமை 2 ஆப்ஷன்களுக்கும் மதிப்பெண் வழங்கும் முடிவுக்கு ஏன் வந்தது?" என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, துஷார் மேத்தா "ஏனென்றால் இரண்டுமே சாத்தியமான பதில்கள்..." என்று பதிலளித்தார்.

இதற்கு, மனுதாரர் தரப்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. "அது சாத்தியமில்லை. 'ஒவ்வொரு தனிமங்களின் அணுக்களும் நிலையானவை மற்றும் அவற்றின் சிறப்பியல்பு நிறமாலையை வெளியிடுகின்றன' என ஆப்ஷன் 2 கூறுகிறது. பழைய என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகம், 'ஒவ்வொரு தனிமத்தின் அணுக்கள்...' என்று கூறுகிறது. ஆனால் புதிய புத்தகம் 'பெரும்பாலான தனிமங்களின் அணுக்கள்' என்று கூறுகிறது. இரண்டுமே சரியாக இருக்க முடியாது," மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்க, ”மாணவர்கள் புதிய புத்தகத்தைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சரியான பதில் 'ஆப்ஷன் 4' என்கிறது. 4.2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 'ஆப்ஷன் 2' தேர்வு செய்து நான்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்,” என்று தேர்வு தேர்வு முகமை தெரிவித்தது.

இதற்கிடையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த தேர்வர்களின் வேண்டுகோள்களை தேசிய தேர்வு முகமை சுட்டிக்காட்டியது. அவர்களால் புதிய புத்தகங்களை வாங்க முடியவில்லை, எனவே, உடன்பிறந்தவர்களின் பழைய புத்தகங்களிலிருந்து படித்தார்கள்.

இருப்பினும், நீதிமன்றம் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது, தலைமை நீதிபதி ஒரு தவறான பதில் எப்படி சரியானது என்று அங்கீகரிக்கப்பட்டது என்பதை இந்த வாதம் விளக்க முடியாது என்று வலியுறுத்தினார். "இரண்டையும் சரியான பதில்களாக நீங்கள் கருதியிருக்க முடியாது. நீங்கள் ஒரு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்... இரண்டும் இணைந்து இருக்க முடியாது." என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், நீதிமன்றம் தேசிய தேர்வு முகமையிடம், "எங்களை கவலையடையச் செய்வது என்னவென்றால், நீங்கள் செய்ததன் பலனை (அதாவது, இரண்டு பதில்களுக்கும் மதிப்பெண்களை வழங்குவது) நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெற்றுள்ளனர்." என்று கூறியது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை செவ்வாய்க்கிழமை தொடரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment