உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வு (NEET-UG 2024) முறைகேடுகள் வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) மற்றும் அமலாக்கத் துறை (ED) ஆகியவற்றுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப “அவசரமில்லை” என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது.
நீதிபதி ஏ.எஸ் ஓகா தலைமையிலான விடுமுறை கால பெஞ்ச், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை வாய்மொழியாக கோரியதை ஏற்க மறுத்தது.
மனுதாரர்களான ஷிவாங்கி மிஸ்ரா தலைமையிலான மாணவர்கள் சார்பில் ஆஜரான மேத்யூஸ் நெடும்பாறை, இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) 2024 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ஆகியவற்றின் கீழும் விசாரணை தொடர வேண்டும் என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
“அமலாக்க துறை, குற்றத்தைக் கண்டறிந்து, விசாரணை செய்து, தண்டனை பெற்றுத் தருவதற்கு கடமைப்பட்டுள்ளது. இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு மோசடி என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ள நீட் தேர்வில், நாட்டின் 3 இடங்களில் முறைகேடுகள் நடந்து உள்ளது... அமலாக்க இயக்குனரகம் இந்த விஷயத்தை அறிந்துகொள்ளும் வரை அல்லது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்க இயக்குனரகத்திற்கு அறிவுறுத்தும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் கொண்டு வரப்பட மாட்டார்கள்,” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் நீதிபதி ஓகா, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப “அவசரமில்லை” என்று தெரிவித்தார்.
நீட் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றுவதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 6-ம் தேதி கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்னதாக பீகார் கைதுகள் குறித்த இடைக்கால அறிக்கையை விரைவாக விசாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், முழுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“வினாத்தாள் கசிவை பீகார் காவல்துறை இப்போது கண்டுபிடித்துள்ளதால், முழு தேர்வையும் ரத்து செய்து, மறுதேர்வை முறைகேடுகளின்றி நடத்துவதைத் தவிர அதிகாரிகளுக்கு வேறு வழியில்லை. வினாத்தாளை வாங்கி, அதை மருத்துவ மாணவர்களிடம் லட்சக்கணக்கில் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் மாஃபியா, அதீத லாபம் தரும் முயற்சியாக, சில காலம் அதை நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்து, தண்டனையின்றி சமாளிக்க முடியும். முறைகேடுகள், இப்போது முழுமையாக அம்பலமாகிவிட்டன” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
"குற்றவாளிகள் தாள்களை யாருக்கு விற்றார்கள், எந்த விலைக்கு விற்றார்கள், பணம் மாற்றப்பட்ட விதம் ஆகியவற்றை விவரிக்கும் வாக்குமூல அறிக்கைகளை கூட குற்றவாளிகள் கொடுத்துள்ளனர்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஜூலை 8-ம் தேதி விரிவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“