swiggy : வரும் மார்ச் மாதம் முதல் ஆன்லைன் ஃபுட் டெலிவரிக்கு பெயர்ப்போன ஸ்விகியில் டெலிவரி செய்யும் வேலைக்கு 2,000 பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
swiggy யில் வேலைவாய்ப்பு:
நேற்று பிறந்த குழந்தை தொடங்கி பழமொழி சொல்லும் பாட்டி வரை ஸ்விகியை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ஆன்லைன் ஃபுட் டெலிவரி சர்வீஸில் ஸ்விகி தனக்கென்று தனி இடத்தை பெற்று வைத்துள்ளது.
விருப்பமான உணவை நாம் தேர்ந்தெடுத்தால் போதும், இருக்கும் இடத்திலேயே ஸ்விகி ஊழியர்கள் உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்து விடுவார்கள். சென்னை, ஐதரபாத், பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் இதன் தேவை சற்று அதிகமாகவே உள்ளது.
இதுவரை கொச்சி, புனே, அகமதாபாத்,கொல்கத்தா, நாக்பூர் மற்றும் மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் உணவை டெலிவரி செய்யும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை ஸ்விகியில் பெண்கள் ஃபுட் டெலிவரி பணியில் ஈடுப்படவில்லை.
இனிமேல், ஸ்விகியில் பெண் டெலிவரி ஊழியர்கள் ஈடுப்படவுள்ளனர். ஆண், பெண் இருவருக்குமான ஒருங்கிணைந்த பணியிடத்தை உருவாக்க ஸ்விகி நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது.. இந்நிறுவனம் நாட்டில் பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து, பெண்களை மாலை 6 மணிவரை உணவுகளை டெலிவரி செய்யும் பணியில் அமர்த்த திட்டமிட்டு வருகிறது.
பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஸ்விகி நிறுவனம் நாடு முழுவதும் 45,000 உணவகங்களுடன் இணைந்து மிகப்பெரிய உணவு விநியோக நிறுவனமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஃபுட் டெலிவரி நிறுவனங்கள், தன் ஊழியர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்பீடுகள், மாதாந்திர ஊக்கத்தொகைகள் மற்றும் பைக் வாங்க கடன் உதவிகள் செய்யவும் திட்டமிட்டு வருகின்றன. பெண்கள் டெலிவரி பணியில் அமர்த்தப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்ற தகவலும் பரவி வருகிறது.