JEE Main Exam 2021 Syllabus: ஜே.இ.இ (மெயின்) தேர்வு-2021-இன் முதல் கட்டத் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் (சிலபஸ்) குறித்து பல மாணவர்கள் கோரா (Quora), ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றன. எனவே, பாடத்திட்டங்கள் குறித்தும், அதை எப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதையும் இங்கு காண்போம்.
முதல் கட்ட தேர்வு:
ஜே.இ.இ (மெயின்) தேர்வு-2021-இன் முதல் கட்டம் 2021 பிப்ரவரி 23-ஆம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை நடக்கும் என மத்தியக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். இணையதளம் வாயிலாகக் கடந்த டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. விண்ணப்பம் செய்வதற்கு வரும் ஜனவரி 16 கடைசி தேதியாகும்.
தேர்வு முறை: மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாடத்திட்டம் : கடந்த கல்வியாண்டு பாடத்திட்டமே தொடரும். எனவே, கடந்த ஆண்டு பாடத்திட்டத்தை கூகுள் இணையத் தேடுபொறி உதவியுடன் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையேல், இந்த இணைப்பைக் கிளிக் செய்து கொள்ளுங்கள்
மேலும், வரும் கல்வியாண்டில் இருந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு கட்டங்களில் நடைபெற இருக்கிறது. பொதுவாக, ஆண்டிற்கு இருமுறை ஜே ஈ ஈ (மெயின்) தேர்வு நடத்தப்படும் என்ற முறையை மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேர்வில், தேர்வர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம். இந்த நான்கு கட்டத் தேர்வுக்கும் கடந்த ஆண்டு பாடத்திட்டமே தொடரும் என்பது கூடுதல் தகவலாகும்.
வரும் கல்வியாண்டு முதல் ஜே.இ.இ மெயின் தேர்வை ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு எடுத்துள்ளது.
இந்தி, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து மாணவர்கள் தேர்வை எழுதலாம். எனினும், தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் என இரண்டில் ஒன்றை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும். எனவே, விண்ணப்ப செயல்முறையின் போது, இதை கவனத்தில் கொள்வது மிக முக்கியமானதாகும்.
தமிழ்நாட்டில் சிறப்பு பயிற்சி:
இதற்கிடையே, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக ஜேஇஇ மெயின் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.
விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி:
இப்பயிற்சிக்கான பதிவை நாளை வரை ( டிசம்பர் 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி) மேற்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இணைய தளம் வாயிலாக இலவசமாக பயிற்சி அளிப்பதற்கு டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.