கடந்த 2014-லிருந்து அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் வெற்றி விகிதம் சரிந்து வருவதால், இதனை மறு சீரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் மாணவர்களின் கருத்துகள் அடிப்படையில் பேராசிரியர் எம்.ரவிச்சந்திரனின், முதல்வர் பதவி இங்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்மையம், எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச சிவில் சர்வீஸ் கோச்சிங் அளித்து, அவர்களை தேர்வுக்கு தயார் படுத்துகிறது. இந்த சிவில் சர்வீஸ் மையத்தின் தேர்ச்சி சரிவு குறித்த காரணங்களை, மாணவர்களுடன் ஆலோசித்தார், மையத்தின் டி.ஜி.டி.
முன்னாள் மாணவர்கள் கருத்து
”அடிக்கடி பயிற்சி மைய முதல்வரை மாற்றுவதால், நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. மையம் புத்துணர்வுடன் செயல்பட, சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த மாற்றங்களை அவ்வப்போது முதல்வர் செயல்படுத்த வேண்டும்” என மாணவர்கள் கூறியதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (பயிற்சி) துறையிடம் டி.ஜி.டி தெரிவித்தார். அதோடு நிர்வாகம் மற்றும் கல்வி பயிற்றுவித்தலில் மறு சீரமைப்பு செய்து, மையத்தை வலிமைப்படுத்தும் படியும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ”டி.ஜி.டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 2 ஆண்டுகளுக்கு ரவிச்சந்திரன் சிவில் சர்வீஸ் பயிற்சி நிலையத்தின் முதல்வராக இருப்பதாக பரிந்துரைக்கப் படுகிறது. அதன்படி மேலும் ஓராண்டு இவர் இம்மையத்தில் பணிபுரிவார்” என அரசாணை வெளியாகியுள்ளது.
சிவில் சர்வீஸ் வகுப்பு எடுப்பதில் ஆர்வமும் திறமையும் உள்ள ஆசிரியர்களை கண்டறிந்து வரும், நிர்வாகம் விரைவில் மையத்தின் கட்டமைப்பை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.