மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு ஆதி திராவிடர் - பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவதாக மயிலாடுதுறை கலெக்டர் மாகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு ஆதி திராவிடர்வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு, தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும் இந்த பயிற்சி பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு ஆண்டு ஆகும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையையும் தாட்கோ ஏற்றுகொள்ளும்.
இந்த பயிற்சியில் சேர www.tahdco.com என்ற தாட்கோ இணையத்ளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவல்கம், 6-வது தளத்தில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயனடையலாம் என்று கலெக்டர் மாகாபாரதி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“