வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான ட்ரோன் இயக்குதல் குறித்து, இளைஞர்களுக்கு தமிழக அரசு பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் சுயவேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்கள் இந்த அருமையான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ட்ரோன் பயன்பாடு பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. புதுப்புது துறைகள் ட்ரோன் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. குறிப்பாக வேளாண் துறையில் ட்ரோன் பயன்பாடு பெருமளவு ஊக்கவிக்கப்படுகிறது. விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில், ட்ரோன் விவசாய வேலைகளை எளிதாக்குகிறது.
இதையும் படியுங்கள்: IGNOU பல்கலை.; 3 பத்திரிக்கை துறை படிப்புகள் அறிமுகம்
இந்த நிலையில், வேளாண் துறையில் டிரோன் பயன்பாடு தொடர்பான பயிற்சியை தாட்கோ நிறுவனம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. ஆர்வமுள்ள பட்டியல்/ பழங்குடியின மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
தகுதிகள்
ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள்/ பெண்கள்/ திருநங்கைகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதிக்கு மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இந்தியர் என்பதற்கான அடையாளச் சான்று வேண்டும்.
பயிற்சி
10 நாட்கள் ட்ரோன் திறன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ. 61,100 முழுவதையும் தமிழக அரசின் தாட்கோ ஏற்கும். பயிற்சி நாட்களில் தங்குவதற்கான வசதி செய்து தரப்படும்.
சொந்தமாக ட்ரோன் வாங்க கடன் உதவி
பயிற்சி காலத்திற்குப் பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மூலம் ட்ரோன் இயக்குவதற்கான உரிமம் வழங்கப்படும். இந்த உரிமங்கள் 10 ஆண்டு காலம் செல்லுபடியாகும்.
பயிற்சியை முடித்தவர்கள், சொந்தமாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவோ ட்ரோன்கள் வாங்க தாட்கோ உதவி செய்யும். கிட்டத்தட்ட 2.25 லட்சம் வரை கடன் உதவி பெறலாம். வேலை வாய்ப்பை தேடுவோர் உழவன் செயலி மூலம் தங்கள் சேவையை சந்தைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு உருவாக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள், தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tahdco.com/ என்ற பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/Drone_poster.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil