பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை எச்சரித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.
அப்போது, முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும், ஆராய்ச்சி மாணவர்களை பேராசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்துவதாகவும் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை நேற்று அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேலைகளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது.
பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“