பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பலருக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்பது கனவாக உள்ளது. எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கு பெரிய போட்டி நிலவி வரும் நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறுவதோடு நீட் தேர்வில் உரிய மதிப்பெண் எடுத்தால் மட்டுமே எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வுக்காக தங்களை தயார்ப்படுத்தி வருவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 07-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் பொதுத்தேர்வுடன் சேர்த்து நீட் தேர்வுக்கும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே 2023-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட தேதியை வைத்து பார்க்கும்போது இன்னும் பதிவு செய்தவதற்காக இணையதளம் திறக்கப்படாத நிலையில், மே மாதம் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்து வருகிறது.
இது தொடர்பான மென்டர் ரமேஷ் பிரபா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில்,
தமிழகத்தில் தற்போது பொது மற்றும் சிபிஎஸ்இ மாணவர்கள் மொத்தம் 10 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் குறிப்பாக சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் நீ்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதில் கடந்த வருடம் நீட் எழுதியவர்களில் 40 ஆயிரம் பேர் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் திறக்கப்படும்போது தமிழகத்தில் இருந்து 1.60 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே ஜே.இ.இ, சி.யூ.இ.டி போன்ற தேர்வுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்கும் இணையதளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. ஆனால் இன்னும் விண்ணப்பிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல் நீட் 2022-ம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கி தெர்வு முடிவு வெளியாவது வரை 4 மாதங்கள் (ஏப்ரல் 06 – செப்டம்பர் 07) ஆனது. அதேபோல் 2019-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பம் நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு மே 5-ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 5-ந் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 497 நகரங்களில் மையங்கள் செயல்பட்டது. 14 வெளிநாடு இடங்களில் தேர்வுகள் நடத்தகப்பட்டது. அதனால் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு விண்ணப்பிக்க மார்ச் 1-ந் தேதி அறிவிப்பு வெளியாகலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 30-ஆகவும், விண்ணப்பங்களை திருத்தம் செய்ய ஏப்ரல் 10-15 தேதிகளிலும், மே மாதம் 1-ந் தேதி ஹால் டிக்கெட் வெளியிடவும், அதன்பிறகு மே 7-ந் தேதி தேர்வுகள் நடத்த கண்டிப்பாக வாய்ப்புகள் இருக்கு.
இதனால் தேர்வு தள்ளிவைக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். படிப்பதற்கு இன்னும் 70 நாட்கள் உள்ளது. நாட்கள் குறைவாக இருக்கிறது என்று எண்ண வேண்டாம்இ அனைவருக்கும் இதே நாட்கள் தான். அதனால் தேர்வு தள்ளிப்போகும் என்று எண்ணாமல் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/