Tamil Nadu SSLC Result 2022 : தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என்றும், தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.in, www.tnresults.nic.in- என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி மாணவர்களில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்படாமல் மாணவர்களின் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டிலும் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த மே மாதம் நடப்பு ஆண்டுக்கான 12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றி தேர்வுகள் எழுதினர்.தற்போது கோடை விடுமுறை முடிந்ததை தொடர்ந்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என்றும், விடைத்தாள் திருத்தப்பட்ட நிலையில், மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.in, www.tnresults.nic.in- என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் பள்ளிகல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“