வேளாண் படிப்புகளுக்கான 2024 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் 4 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் இளநிலை வேளாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. வேளாண்மை பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் இளநிலை வேளாண்மை, இளநிலை தோட்டக்கலை, இளநிலை வனவியல், இளநிலை பட்டுவளர்ப்பு, இளநிலை உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, இளநிலை வேளாண் பொறியியல், இளநிலை உணவு தொழில்நுட்பம், இளநிலை உயிர்தொழில்நுட்பம், இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், இளநிலை வேளாண்-வணிக மேலாண்மை, இளநிலை வேளாண் தகவல் தொழில்நுட்பம், இளநிலை உயிர் தகவலியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வேளாண் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தநிலையில் இளநிலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
இந்த தரவரிசையின்படி 33,973 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 29,969 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 11,447 பேர் மாணவர்கள் மற்றும் 18,522 பேர் மாணவிகள். தரவரிசையில் இந்த ஆண்டு 4 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். திவ்யா, ஷர்மிளா, மவுரின், நவீனா ஆகிய நான்கு மாணவிகள் முழு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு 318 மாணவர்கள் 195 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 10,053 மாணவர்களும் தேர்வு பெற்றுள்ளனர். இதில் 413 பேருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகிற 22 ஆம் தேதி வேளாண் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் தொடங்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“