தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கவுன்சிலிங்கிற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 36 ஆயிரத்து 945 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
பல ஆண்டுகளாக பொறியியல் படிப்புக்கான மோகம் குறைந்து வந்த நிலையில், இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளனர். கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளில் சேர மாணவர்கள் அதிகம் விருப்பம் காட்டுகின்றனர்.
முன்னணி கல்வி நிறுவனங்களில் மேனேஜ்மெண்ட் பிரிவு இடங்களில் கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூலை 22ஆம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அடுத்த 5 நாட்களில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக சேர அதிகம் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “கடந்த ஆண்டு பிஏ, பிஎஸ்சி, நீட் வகுப்பில் சேர்ந்தவர்கள் கூட பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளனர். கேம்பஸ் இன்டர்வியூ வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பொறியியல் படிப்பை தேர்வு செய்கின்றனர்.
மேலும், கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளுக்கு முன்னணி கல்வி நிறுவனங்கள் அதிகம் கட்டணம் வசூலிக்கப்பதால், கவுன்சிலிங் முறையை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்” என்றார்.
சென்னையில் உள்ள முன்னணி தனியார் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் கூறுகையில், “கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஐடி,ஏஐ, டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். இந்த படிப்புகளில் மேனேஜ்மெண்ட் பிரிவு இடங்கள் நிரம்பியுள்ளன. சில கல்லூரிகளில் மெக்கானிக்கல் பிரிவு இடங்களும் நிரம்பியுள்ளன” என்றார்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக கால தாமதமானதால், தமிழக அரசு பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதியை ஜூலை 27ஆம் வரை நீட்டித்து அறிவித்தது. ரேண்டம் எண் வெளியீடு , சான்றிதழ் சரிபார்ப்புகான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. ஆன்லைன் கவுன்சிலிங் ஆகஸ்ட் 22ஆம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1.4 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்ளை தேர்வு செய்ய போட்டி இருக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil