தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 சேர்க்கை இடங்களுக்கு, ஆன்லைன் விண்ணப்பம் முறை கடந்த ஜூலை 20 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. 92,000 இடங்களுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதுகுறித்து முன்னதாக, கல்லூரி கல்வித்துறை இயக்கம் வெளியிட்ட சுற்றரிகையில், " தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப் 4-ம் தேதி வரை முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறும். சான்றிதழ்களை சரிபார்த்து, சிறப்புப் பிரிவு மற்றும்
இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் வெளியிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை விண்ணப்பித்த, மாணவர்களை நேரடியாக தொடர்புக் கொண்டு ஒப்புதல் கடிதம் பெற்று இடங்களை ஒதுக்க வேண்டும். தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் விண்ணப்பித்தில் குறிப்பிட்டுள்ள விருப்பத்தின் அடிப்படையில், பாடப்பிரிவை ஒதுக்க வேண்டும். இறுதி பட்டியளில் இடம் பெற்ற மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்களை ஆக. 26-ம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும். சிறப்புப் பிரிவுக்கு ஆக.28-ம் தேதியும், பொதுப் பிரிவுக்கு ஆக.29 முதல் செப்.4-ம் தேதி வரையும் சேர்க்கையை நடத்தி முடிக்கப்படும்" என்று தெரிவித்தது.
மேலும், "பி.ஏ. தமிழ் பாடநகலுக்கான தரவரிசை பட்டியல் பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் மதிப்பெண்கள் அடிப்படையிலும் , பி.ஏ ஆங்கில இலக்கியம் படிப்புக்கு 12ம் வகுப்பு ஆங்கில மதிப்பெண்கள் அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் . பி.எஸ்.சி, பி.காம், இதர பி.ஏ படிப்புகளுக்கு மொழிப் பாடங்கள் தவிர்த்து மற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்க்கவும், சான்றிதழ்களைப் பதிவேற்றாத மாணவர்களைத் தொடர்பு கொள்ளவும் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
மாணவர்கள் தாங்கள் விண்ணபித்த அல்லது அருகே உள்ள வேறு அரசுக் கல்லூரிக்கு சென்று சேர்க்கை ஆணை, கட்டண ரசீது, அசல் சான்றிதழ்களை சமர்பித்து சேர்க்கையை உறுதி செய்யலாம் என்றும், சேர்க்கைக்கு பெற்றோர்களை அழைத்து வரவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil