/indian-express-tamil/media/media_files/2025/09/30/tamil-nadu-ayush-counselling-2025-09-30-16-43-37.jpg)
தமிழ்நாடு ஆயுஷ் கலந்தாய்வு 2025: முதல் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியீடு!
ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான (Undergraduate Courses) 2025-ம் கல்வியாண்டுக்கான கலந்தாய்வு செயல்முறையின் விரிவான அட்டவணையை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ளது. இக்கலந்தாய்வானது, இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BAMS), இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BUMS), இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BSMS), மற்றும் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (BHMS) ஆகிய படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆயுஷ் கலந்தாய்வு 2025-ன் முதல் சுற்றுக்கான சாய்ஸ் ஃபில்லிங் (விருப்பங்களைப் பதிவு செய்தல்) இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவு (Submit and Lock) செய்ய, அக்டோபர் 7, மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை tnmedicalselection.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் செய்ய வேண்டும்.
முதல் சுற்று இட ஒதுக்கீட்டுக்கான (Seat Allotment) முடிவுகள் அக்.10 அன்று வெளியிடப்படும். இடங்கள் ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அக். 10 முதல் அக்.17 மாலை 5 மணி வரை தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையைப் (Provisional Allotment Order) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவர்கள், ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அக்.17 மாலை 5-க்குள் கண்டிப்பாகச் சேர வேண்டும். சாய்ஸ் ஃபில்லிங்கில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் திரும்பப் பெற முடியாத செயலாக்கக் கட்டணமாக (Non-refundable Processing Fee) ரூ. 500 செலுத்த வேண்டும்.
கூடுதலாக, பொதுப் பிரிவு (OC), பிற்படுத்தப்பட்ட வகுப்பு (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (MBC), பட்டியலினத்தவர் (SC), பட்டியலினத்தவர் அருந்ததியர் (SCA), பழங்குடியினர் (ST), மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கிறிஸ்தவர் (Backward Class Christian) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த, ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவாக இல்லை என்பதைக் காட்டும் வருமானச் சான்றிதழைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், ரூ.5,000/- முன்பணக் கல்விக் கட்டணத்தை (Advance Tuition Fee) ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
இருப்பினும், வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளதற்கான சான்றிதழைக் கொண்டுள்ள SC, SCA, ST மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கிறிஸ்தவர் பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த முன்பணக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பிரிவின் கீழ் இடம் ஒதுக்கீடு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள், பொதுப் பிரிவின் (General Merit List) கீழ் தங்கள் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கலந்தாய்வு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.