தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சித்தா (BSMS), ஆயுர்வேதா (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மருத்துவப் படிப்புகள் நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மொத்தம் 34 அரசு மற்றும் தனியார் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் 2,240 இடங்கள் உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கான 2025-26 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று (ஜூலை 24) தொடங்குகிறது.
இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 31.12.2025 தேதியின்படி, 17 வயதை நிறைந்திருக்க வேண்டும். மேலும், 10+2 என்ற முறையில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tnayushselection.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும்.
அரசு கல்லூரி இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் மேனேஜ்மெண்ட் இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் என மாணவர்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் இணையவழியில் விண்ணப்பித்த பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து, அனைத்து சான்றிதழ்களிலும் சுயசான்றொப்பமிட்டு நகல்களையும் இணைத்து ”செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106” என்ற முகவரிக்கு 08.08.2025 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.