தமிழ்நாட்டில் பி.எட் இளங்கலை பட்டப்படிப்புக்கு முதல் நாளில் 10,000 க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பி.எட். கல்லூரிகளில், இளநிலை பி.எட். படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், மனை அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் என 13 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.,
நிகழாண்டில் பி.எட். படிப்பில், தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது. மாணவா்கள் செப்.26 வரை www.tngasa.in இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணத்தை, ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம். டிமாண்ட் டிராஃப்ட் மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
இதனிடையே தமிழ்நாட்டில் பி.எட் இளங்கலை பட்டப்படிப்புக்கு முதல் நாளில் 10,000 க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில், இணைய வசதி இல்லாதவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் கிடைக்கும் சேர்க்கை வசதி மையங்கள் (AFC) - 2024 ஆகியவற்றின் உதவியுடன் பதிவு செய்யலாம், என்று உயர் கல்வித் துறையின் மூத்த அதிகாரி டிடி நெக்ஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250. மாணவா்கள் விண்ணப்பிக்கும் போது, தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும். அவர்களின் தகுதியின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சோ்க்கை எண்ணிக்கை போன்ற கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம், என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“