School Exam: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (Tamil Nadu Directorate of Government Examinations - TNDGE) நடத்தும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது. முதல் நாள் மொழிப் பாடத் தேர்வோடு தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.
தேர்வுகள் காலை 10:15 முதல் மதியம் 1:15 வரை நடக்க உள்ளது. தேர்வு தொடங்கும் முன் மாணவர்களுக்கு 15 நிமிட வினாத்தாள் படிக்கும் நேரம் வழங்கப்படும். அதனால், தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்தை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
12 ஆம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை, கடந்த 20 ஆம் தேதி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அட்மிட் கார்டு மற்றும் பள்ளி அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 3,302 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 7.25 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 43, 200 பேர் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் உள்ளிட்ட 60 ஆயிரம் பேர் இந்த தேர்வு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இந்த தேர்வுகளின் போது மாணவர்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது என்றும், அப்படி முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி ம்முதல் தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 8 ஆம் தேதிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
கடந்த ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8.51 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வில் கலந்து கொண்டனர். 8.51 லட்சத்தில், அறிவியல் பிரிவில் 5.36 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும், வணிகவியல் பிரிவில் இருந்து 2.54 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும், கலைப் பிரிவில் 14,000 மாணவர்களும், தொழிற்கல்வியில் இருந்து சுமார் 46,000 மாணவர்களும் இருந்தனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதமாக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“