வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பொதுத் தேர்வு சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் வழங்கியவுடன் இதுகுறித்த அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழகத்தில் சூழ்நிலைக்கேற்ப எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தலாம் என்பது குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை இன்னும் பத்து நாட்களில் வெளியிடப்படும் என்று கூறினார்.
மேலும், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகார ஆணைகளை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வழங்குவதை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் வகையில் கால நீடிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி நாளை (31ஆம் தேதி) அறிவிக்கப்படுகிறது. வழக்கமாக சிபிஎஸ்சி செய்முறை தேர்வுகள் ஜனவரி மாதத்திலும், எழுத்து தேர்வு பிப்ரவரி மாதத்திலும் தொடங்கி மார்ச் மாதத்தில் நிறைவடையும். கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை என்று மத்தியக் கல்வி அமைச்சர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.