Tamil Nadu Budget 2023-24 Tamil News: 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் அவர் கல்வி துறைக்கு மட்டும் சுமார் 47 ஆயிரத்து 266 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கல்வி தொடர்பாக அறிவித்திருக்கும் இதர தகவல்களை இங்கு பார்க்கலாம்.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை கீழ் கொண்டுவரப்படும் என்றும் திருச்சி, கோவை, மதுரை, நீலகிரியில் 100 கோடி ரூபாய் செலவில் ஆதி திராவிடர் நல விடுதிகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சித்தா மருத்துவக்கல்லூரி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத்திருவிழா நடத்தப்படும்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 500 கோடி ரூபாயில் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறப்பு.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்கள், முதன்மை தேர்வுக்கு தயாராக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதேபோல், முதல்நிலை தேர்வுக்கு தயாராக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil