8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி, இருமொழிக் கொள்கை, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து உள்ளிட்ட கொள்கைகள் அடங்கிய மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டிற்கு என மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்படும் என 2021-22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த குழு 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட வேண்டும்; 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது; பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்த வேண்டும்; தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ்வழிக் கல்வியை வழங்க வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார்.
மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்
தமிழ்நாட்டிற்கு இருமொழி கொள்கை தான் இருக்கும். அதாவது தமிழ்நாட்டினுடைய தாய்மொழியான தமிழ் மொழி மற்றும் அதனோடு உலக மொழிகளை தொடர்பு கொள்ளக்கூடிய வகையிலே ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கும்.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெறும். 11 ஆம் வகுப்பிற்கு இனி பொதுத்தேர்வு கிடையாது. 11 ஆம் வகுப்புத் தேர்வுகள் மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித திறனை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.
மேலும் 10 ஆம் வகுப்புக்கு முன்னர் பொதுத் தேர்வு இருக்காது. அதாவது 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இருக்காது. 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் தேர்ச்சி அளிக்கப்படும். மேலும் தேர்ச்சியினை தீர்மானிக்க ஆண்டு இறுதித் தேர்வுகளை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
5 வயது நிறைவடைந்த குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்கலாம். சி.பி.எஸ்.இ போன்ற நிறுவனங்கள் 6 வயது ஆனால் தான் முதல் வகுப்பில் சேர அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்.
தமிழக வரலாறு மற்றும் பண்பாடு பாடத்திட்டத்தில் முக்கியமாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் முன்னோடி மாதிரி பள்ளி அமைக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் ஆகியவற்றை 11 வயது முதலே கற்றுத் தரும் திட்டம் செயல்படுத்தப்படும்.
'நான் முதல்வன்' திட்டத்தில் 9 ஆம் வகுப்பு முதலே தொழில் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் வழங்கப்படும்.