ரத்து செய்யப்பட்ட கல்லூரி பருவத் தேர்வுகளுக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறை பற்றிய அரசாணையை தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டது.
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து
செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அறிவித்தார்.
தேர்வு ரத்துசெய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறை பற்றிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
கீழ்கண்ட வழிமுறைகளின் கீழ் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
"சென்ற பருவத்தில் மாணாக்கர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில்லிருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீ்டு ( இன்டர்னல் அசஸ்மென்ட் ) அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டிலிருந்து 70 சதவீத மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்து 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மைப் பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு 100 சதவீத அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
செயல்முறைத் தேர்வு நடத்தப்படாமலிருந்தால், ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மாணவர்கள் இதற்கு முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அத்தேர்வுகளைப் பின்னர் எழுதவேண்டும்.
தொலைதூரக் கல்வியை பொறுத்தவரை மேற்கொண்ட நடைமுறை பின்பற்றப்படும்.
தொலை தூரக் கல்வியில் எங்கெல்லாம் அக மதிப்பீடு இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்குபெற்று அவர்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம்.
இந்த கொரோனா பெருந்தொற்றின் கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளித்து அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்".
இவ்வாறு, உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil