உயர் கல்வி படிப்புகளில் பொதுப் பாடத்திட்டத்தைக் கொண்டு வரும் அறிவிப்புக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சிலின் (TANSCHE) புதிய பொதுப் பாடத்திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் (JAC) உறுப்பினர்கள் மதுரை மற்றும் திருநெல்வேலியில் ஜூலை 8 ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையும் படியுங்கள்: தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; தண்டனை பெற்றவர்களை பரிந்துரைக் கூடாது; பள்ளி கல்வித்துறை உத்தரவு
கல்வியாளர்கள் அல்லது கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் போன்ற பங்குதாரர்களைக் கலந்தாலோசிக்காமல் அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டக் கொள்கையை மாநிலம் முழுவதும் TANSCHE அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்களின் சுயாட்சியைப் பறித்து, தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சி இது என்று போராட்டம் நடத்தி வரும் கல்லூரி பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். மேலும், தங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஜூலை 12-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு TANSCHE அழைப்பு விடுத்துள்ளதாகவும் என்று போராட்டம் நடத்தி வரும் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையுடன், தொழில் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் நிதிப் பலன்கள் வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) வழிகாட்டுதலின்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்.பில் மற்றும் பி.எச்.டி ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil