/indian-express-tamil/media/media_files/2025/05/01/ecNI1lFDoszWZ2r9ZDpL.jpg)
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துவதற்காக ‘லெவல் அப் (Level Up)’ எனும் புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அடிப்படை திறன்கனை மேம்படுத்தும் நோக்கில் ‘திறன்கள்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், தேசியளவில் நடைபெறும் நாஸ் (NAS), ஏ.சி.இ.ஆர் (ACER) போன்ற கற்றல் அடைவு ஆய்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புக்கேற்ற மொழித் திறன்கனை அடைவதில் குறைபாடு கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
இதையடுத்து மாணவர்களின் ஆங்கில அடிப்படை மொழித் திறன்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்கள் பலர் மாணவர்களின் மொழித் திறன்கனை வளர்க்கும் வகையில் கற்பித்தல் நுட்பங்களை தாங்களே உருவாக்கி வகுப்பறைகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். இப்படி மாணவர்களின் மொழி திறன்களை வளர்க்கும் வகையில் சில ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் நுட்பங்களை, பிற ஆசிரியர்கள் அறியும் வகையில் அவற்றை மொழி வள வங்கியாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர மாணவர்களின் மொழி திறன்களை மேம்படுத்த ஒரு புதிய முன்னெடுப்பாக ‘லெவல் அப்’ எனும் தன்னார்வ திட்டமும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் நோக்கமானது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படையை எளிதாக கற்றுக் கொள்ள வழிசெய்வதாகும். இதற்காக மாவட்டந்தோறும் பிரத்யேக வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் வழிமுறைகள் தொடர்பான பதிவுகளை பகிர்ந்துக் கொள்ள முடியும். வரும் ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் அடைய வேண்டிய குறைந்தபட்ச மொழி திறன் இலக்குகள் நிர்ணயித்து இந்த குழு செயல்பட உள்ளது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.