தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.20 லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,576 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவை தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மிதமான அளவில் இருந்து வருகிறது. இந்தநிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனையடுத்து, வழக்கத்தைவிட முன்னதாக, கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்கின. மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு, விளம்பரப் பணிகளையும் பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்தது.
அதன் பலனாக, தமிழகம் முழுவதும் பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர். இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘மக்களவை தேர்தல் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். அங்கன்வாடி மையங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களை ஆசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு, அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு 4 லட்சம் பேர் வரை அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்’’ என்று கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“