தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ சட்டத்தின் (RTE Act) மூலம் மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஏப்ரல் 22) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் (Right to Education) கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர, பிற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கல்விக் கட்டணம் செலுத்தும்.
அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. இதற்கு rte.tnschools.gov.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 20 ஆம் தேதி ஆகும்.
விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்தது, பதிவேற்றம் விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், அந்த பள்ளிகளில் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆர்.டி.இ மூலமான மாணவர் சேர்க்கை இரண்டு பிரிவுகளில் நடைபெறும். எல்.கே.ஜி வகுப்பு முதல் சேர்க்கை பெறலாம் அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் சேர்க்கை பெறலாம்.
மேலும், 8 ஆம் வகுப்பு வரை இலவச கல்வியைப் பெறலாம். எல்.கே.ஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், 2021 ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், 2019 ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களுடைய வீடுகளுக்கு அருகாமையில் அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பம் செய்யலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
இந்த சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருமானம், இருப்பிடம் மற்றும் சாதி சான்றிதழ்களை பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் இந்த சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“